ஆவணி சதுர்த்தி

Inuvil kanthan

ஆவணி சதுர்த்தி

விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அனுஷ்டிக்கும் விரதம்.

விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று.

விநாயகப் பெருமான் உற்பவமான தினம் இது என்பர். ஆவணி மாத வளர் பிறைச் சதுர்த்தித் திதியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். மதியவேளையில் சதுர்த்தி நிற்றல் அவசியம்.

கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூத முனிவரால் பஞ்ச பாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கெளரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.

அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அனுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.

தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப் பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.

இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அனுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.

அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மா அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபட வேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால் பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.

வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழை மரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.

அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.

விசேஷ நிவேதன்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத் துண்டு, வெள்ளரிப் பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)

விநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம். இருபத்தொரு பத்திரம், இருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.

இவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்க பூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும் (ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்)

மாத சதுர்த்தி விரதம் :

மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அனுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.

மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ள வேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாததெனின் ஏழு வருடங்கள் அனுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.

விரத உத்தியாபனம் :

குறிப்பிட்ட கால எல்லை முடிந்ததும் அதாவது தாம் கைக்கொள்வதாகக் கருதிய வருடம் நிறைவு பெற்றதும் முறைப்படி விரதத்தை முடித்து விரதபலனைத் தருமாறு வேண்டுதல் செய்தலே விரதோத்யாபனமாகும்.

முன்பு கூறப்பட்ட விதமாக வீட்டிலே பூஜை வழிபாடுகள் செய்யும்போது தங்கம், வெள்ளி, செம்பு இவற்றில் ஏதாவதொரு உலோகத்தில் விநாயகர் திருவுருவத்தைச் செய்து வைத்து ஆவாகனம் செய்து பூஜை நடத்த வேண்டும். அன்று உபவாசமிருந்து மறுநாட்காலை புனர்பூஜையின் பின் (மீண்டும் பூஜை செய்தல்) உத்வாசனம் செய்து அர்ச்சகருக்குரிய தஷிணை தாம்பூலங்களுடன் உலோகப் பிரதிமையையும், கும்பப் பொருட்களையும், வேட்டி சால்வை முதலிய தானங்களையும் வழங்கி இதன்பின் மஹேஸ்வர பூஜை செய்து (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல்) தாமும் காலை எட்டரை மணிக்கு முன்னதாகப் பாரணை செய்து விரத பூர்த்தி செய்யலாம்.

விரத உத்யாபன சமயத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது ?வ்ரதோத்யாபன காலே யதோக்தபல சித்யர்த்தம் விசேஷ பூஜாம் ஆசார்யமுகேன ஆஹம் அத்ய கரிஷ்யே? (விரத பூர்த்தி காலத்தில் சாஸ்திரத்தில் கூறியபடி விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சித்திக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பூஜையைச் செய்கிறேன்.) என்று சங்கல்பத்துடன் ஆரம்பித்து ஷிநிவில் அர்ச்சகருக்குரிய தானம் வழங்கும் போது ? ப்ரதிமாம் வஸ்த்ர சம்யுக்தாம் கும்போகரணைர்யதாம், துப்யம் தாஸ்யாமி விப்ரேந்த்ர யதோக்த பலதோ பவ ? (பிரதிமை, வஸ்திரங்கள், கும்பப் பொருட்கள் முதலியன தானங்களை மகிழ்ச்சியுடன் பிராமணோத்தமருக்கு வழங்குகிறேன், இவ்விரதத்திற்குச் சொல்லப்பட்ட பலன்கள் எனக்கு உண்டாகட்டும்.) என்று பிரார்த்திக்க வேண்டும்.

பூஜை முடிவில் கும்பத்தால் யஜமானுக்கு அபிஷேகம் செய்வித்தலும் சொல்லப்பட்டிருக்கிறது. உலோகப் பிரதிமை செய்வதற்கு வசதியில்லாதவர்கள் களிமண்ணால் செய்து வழிபட்டபின் அதனை நீர்நிலையில் விட்டு விடலாம்.

விரதோத்யாபன காலத்தில் இவ்வாறு வீட்டில் பூஜைகள் செய்ய வசதியில்லாதவர்கள் ஆலயத்துக்குச் சென்று அபிஷேகம் பூஜை அர்ச்சனை, உற்சவம் முதலியன செய்வித்தபின் அல்லது குறைந்த பட்சம் விரதோத்யாபனத்துக்குரிய சங்கல்பத்துடன் சஹஸ்ர நாமார்ச்சனையாவது செய்து அர்ச்சகருக்குரிய தாம்பூல தஷிணைகள் தானங்கள் வழங்கி முன்கூறியவாறு விரதபலனைத் தருமாறு பிரார்த்தித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம்.

Share this post